Sunday, March 27, 2016

தவறியது நீங்கள் அல்ல..நான் !

அன்பிற்குரிய அப்பா,
நீண்ட நாட்களுக்குப் பிறகு
நான் எழுதும் கடிதம்..
உங்கள் பிரியமான
இளைய மகள்.
அம்மா குட்டிப்பொண்ணு
ஒரு முறை அல்ல..
பல முறை ஒலிக்கிறது
உங்கள் குரல்.
“ஒரு முறையேனும்
நின்று பதில் சொல்லேன் அம்மா “...நீங்கள்
கூறியது இப்போது என் நினைவில்.
இங்கும் அங்குமென வீட்டில்
ஓடித்திரிந்த என்னை
எங்கு சென்று அடங்கினாள் ?
இவள் எங்கேயெனத் தேடி வந்து
என் அறைக்கதவு அருகே நின்றதும்
ஓருவழியாய் உறங்கிப்போன எனை,
ஒரு கணம் பார்த்துவிட்டு
“சாப்பிட்டாளா “ சற்றே மெலிந்த குரலில்,   அம்மாவிடம் வினவியதும்
விடாது நான் முயற்சித்த
சமையல் அனைத்தையும்
“அம்மாவை விட நன்றாய் செய்திருக்கிறாயம்மா”
பெருமை பொங்கப் பாராட்டியதும்
வலி என படுத்திருந்தால் ,பிள்ளைக்கு
இத்தைலத்தை முதலில் தேய்த்துவிடு என
என் தாயைப் பணித்ததும்,
அன்று பெரிதாய் கண்டு கொள்ளாதிருந்த எதுவும்,
இன்று பெருமளவு எதிர்ப்பார்த்து ஏமாறுகிறேன்..
நான் செய்த தவறு எதுவாயினும்,
“இப்படி செய்யாமல்
அப்படி செய்திருக்கலாமேயம்மா”
கருத்துக்கள் அனைத்தும் கடியாமல் உரைத்ததும்;
எனக்கு தேவையேயிராது
என்று ஒதுக்கியிருந்தேன்.
இன்றோ, நிறைய கேள்விகள் மனதுள்..உட்க்கார்ந்து பேச நீங்களும் இல்லை
இக்கடிதம் அனுப்பி பதில் காண
விலாசமும் இல்லை.
எப்போதும் எதுவும்
இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும்
சொல்லிச் சென்றீரே..
விளங்கவேயில்லை இப்போது..
நீங்கள் எங்கு சென்று, யார் மனதுள் புகுந்தீரோ
யாருடன் உரையாட நான் ?
நீங்கள் ஏய் என்றதும் ,உங்கள் முன் வந்து நிற்க்கும் என் அம்மையிடமா
நீங்கள் உங்கள் அண்ணனை கண்ட
என் அண்ணனிடமா,இல்லை
நீங்கள் உங்கள்  அக்காவை  
காணும் என் அக்காவிடமா? இப்போதுங்கள் தங்கையின் சாயலையொத்த என்னிடமேவா..?
உங்களோடு உரைக்க..நான்
யாருடன் உரைக்க ?
“ஐயா” என நீங்கள்
பாசமாய் மொழிந்த என் மகனிடமா ?
அனைவரையும் பார்த்துவிட்ட களைப்பில்,இனி
பார்த்து மொழிய நேரமின்றி எங்களைப் பிரிந்து  ..
எங்கு சென்று புகுந்தீரோ ?
புதிதாய்ப் பிறந்தும் ,
பழக வாய்ப்பின்றி
உங்கள் வாய்மொழிக்கு ஏங்கும்
என் அண்ணன் மகளிடமா..?
எங்கே புகுன்றிருப்பினும்...யார் வழியேனும்
மொழியுங்கள் அப்பா, என்னுடன்.ப்ளீஸ்.







No comments: