Sunday, January 22, 2017

புரட்சித் திருவிழா

பட்டு வேட்டியும் பள பளக்கும்
புடவையுமாக நாங்கள் !
மாட்டுச் சாணம் கொண்டு
தரைகளை நிறமேற்றி
பச்சரிசி மாக்கோலமும், அதில்
பளிச்சிடும் வண்ணங்களும்.
மணல் அடுப்பும்
மண் பானையுமாக
குழந்தைகள் முதல்
முதியவர் வரை
பரபரக்கும் தருணம் அது.
மஞ்சள் கிழங்கும்
மாவிலைத் தோரணமும்.
திருநீற்று நெத்தியோடும்
சந்தனம் குங்குமத்தோடும்.
இன்சொல்லால் வாய் நிறைந்து,
வயிரு நிறைய இனிப்பும்
கை கொளா நீள் கரும்பும்.
எம் வீட்டுப் பெண்டிர் படைத்த
திகட்டத் திகட்டத்
தின்னத் தோன்றும்,
பச்சரிசிப் பொங்கல்.
கோடிகளில் புரண்டாலும்
கோமாதவை தொழுது,
கோமியம் தெளித்து,
வீட்டினில்; வேதம் பயின்றது போய்..
இன்று நடுரோட்டினில்
திமில்களோடு துள்ளியெழும்
காளைகளாய் சீறுகிறோம் !
வீதிகளில் சிறியோர்
ஆடி முடித்திடும் விளையாட்டல்ல.
நாம், தின்று செரித்த சோற்றுக்காக
உண்ண வழியில்லா உழவருக்காக
வளராதிருக்கும் விளைச்சலுக்காக
வீரம் பொங்க , விடாது முழங்குவோம்.
எங்கள் தைப்பொங்கலுக்கு
விடுமுறையும் வேண்டும் !
எங்கள் ஆண்மை மிகைப்பட
ஏறுதழுவுதலும் வேண்டும் !
இங்கு எங்களைப்
புறந்தள்ளி புகநினைத்தால்,
தீயிலிட்ட வீண் வரட்டிகளாய்
எரிந்திடுவீர் இப்போதே;
எங்கள் முன்னால் !
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
சுண்ணாம்பு பூசுதலுக்கும்
சுவர் அலங்காரங்கள் செய்யவும்
சுறுசுறுப்பாக ஓடி ஆட,
சல்லிக்கட்டில் பாடி ஆட ;
எம் நாட்டுக்கு
வருவோருக்கெல்லாம்
விருந்துபடைக்க காத்திருப்போம்,
சுடர்விட்டுக் காத்திருப்போம்
மகிழ்வோடு ! வரும்
பொங்கல் வரும்வரை.










  

Thursday, January 12, 2017

குணம் கைவிடேல் !


நித்திரையில்,பணிச் சுமையில்
அமைதியில், இரைச்சலில்
நேற்றைய நிகழ்வில்
இன்றைய பொழுதில்,
நாளைய தினத்தில்,
எவ்வேளையிலும்,
வருங்காலத்திலும்
நிஜம் ஒன்றே.
காலம் கடந்தே தீரும்.
கடந்த காலம் கழியட்டும்..
இனிதென இருக்கும் இந்நொடி
கசப்பை போக்கட்டும்.
வாழ்வதில் கவலை இல்லை
சாதலில் அச்சம் இல்லை
இருப்புக்கொள்ளா ஐயம்,
எதிலும் இல்லை.
இங்ஙனம் இவ்விடம்
முழுமையாய்,
இழக்க ஒன்றுமில்லை
அடையவும் ஒன்றுமில்லை.
சேகரித்த நினைவுகள் பல
பெற்ற அனுபவங்கள் சில,
இவற்றோடு நான்..
சிறு ஏமாற்றங்கள்
சிறு ஏற்றங்கள்,
இதனொடு நன்றியும்.
பாரதியை நினைவுகூர்ந்து,
நிமிர்ந்த நன்நடையோடும்
நேர்கொண்ட பார்வையோடும்,
மாறாத மகிழ்வோடு
வரும் புத்தாண்டில்
புன்னகை தவறேன் !
குணமதை கைவிடேன் !

தீர்மானித்து,தெய்வத்தை வணங்கி காத்திருக்கிறேன் ;
இரெண்டாயிரத்து பதினேழாமாண்டு வருகவே !!.


Wishing all my Friends,Siblings,Cousins,Relatives and Families, a very happy and a prosperous New Year 2017. Wrote this on the eve of NewYear.


கனவுக் கண்ணாடி



பிதற்றல்கள்  கருத்துக்களாக
சேட்டைகள் அரிய செயல்களாக
பேதைகள் மேதைகளாக
மெளனம் இடைவிடாப் பேச்சாக
சொற்ப்பொழிவு ஊமையாக
ஊனம் நடனமென
நஞ்செல்லாம் அமுதமாக
கசப்பவை இனிமையாக
பேரிரைச்சல்களோ நிசப்தமாக
தொலைந்தவை கைகளில்
வெறுத்தவை காதலாய்
கண்கள் கசிகிறதே களிப்பில்,
இராவணன் எவருமே இல்லை !
கனவென்னும் இவ்வூரில்.
காண்பவர் எல்லாம்
இராமரும் சீதையுமாக.
கலைகள் இங்கு அறிவியலாம்;
கணக்குகள் கவிதைகளாம்;
தொழில்நுட்பங்கள் ஓவியங்களாம்.
சற்றே விசித்திரம் தான்
இங்குள்ள கண்ணாடிகள்.
விசாலமான பார்வையோடு
விலாசம் தேடுகிறேன்.
"கனவுக் கண்ணாடி" எங்கென்று ?!