Tuesday, September 29, 2009

வேண்டுதல்



எதிலும் பற்று அற்றதாய்
நான்,
எல்லாம் பற்றி பழகவேண்டும் என
அவர்.
அறிவைக்கூட அளவோடு பயன்படுத்தும்
நான்,
ஆண்டவனோடும் அறிவு செலுத்தவேண்டும் என,
அவர்.
மிகவும் அழகாய் இருத்தல் ஆபத்தென்பேன்,
நான்,
மிக்க அழகு மனிதனின் ஆயுதமன்றோ என்பார்
அவர்.
மன உளைச்சலானால் , நேரம் முக்கியம் அல்ல என
நான்,
மண்டை உடைந்தாலும் நேரம் தவறக்கூடாதென
அவர்.
பிடித்தவை யாவும் ரசித்து ருசிக்கும்
நான்,
பிடித்ததே ஆயினும் ருசிக்கு மயங்கக்கூடாது என
அவர்.
அழுகையும் காதலும் அடைக்க முடியாது என
நான்,
காதலால் கூட கண்ணீர்வடிக்க கூடாதென
அவர்.
இப்படிப் பல வேறுபற்ற எண்ணங்களோடு
நானும் அவரும்,

இல்லறம் இனிமை எனவும் முடியாமல்,

இன்னல் என்றுரைக்கவும் மனமில்லாமல்,

அவ்வப்போது ஓர் நெருடலும் அதன் ஓடே

என்றும் பிரியவேண்டாத நெருக்கமும்,

திருமணத்திற்கு பிறகுதான் யோசிக்கிறேன்

நிதமும் உன்னைப்பற்றி.

அம்மா, உன் பொறுமை,

எனக்கும் கொஞ்சம் கொடுக்கச் சொல்லி ,

எனக்காக,

உன் இஷ்ட தெய்வத்திடம் கேட்பாயா ப்ளீஸ் ... ?!


Thursday, September 3, 2009

காதலுக்காக ...

தேவைகளில் தொடங்கியது
அல்ல என் நேசம்,
தேவையேயில்லை என்றாலும்
தொடரும் என் பாசம்.

மொழியாதிருப்பதால் மறந்தேன்
என நினையாதே
மறைத்தே மொழிவேன்
என்னுள் தானே நீ..!

கல்லூரிக் காலம்-நாம் சேர்ந்திருந்த அந்தச் சில நொடிகள் ...

வருடங்கள் பல,
வாழ்ந்திருக்கும்;
காகிதமலராய் இல்லாமல்
இன்று தோன்றி ,
இன்றே மறையும் ;
வாசமலராய்..
நமது பந்தம்.

காணாத ஒன்றை
கண்டுவிட்ட துடிப்பும்,
கண் இமைக்கும் நேரத்தில்
காணாது போவதுமாய் ...
நமது பந்தம்.

கல்லூரிக் கடலில்
நான் கண்டெடுத்த
முத்துக்களுல் ஒன்றாய்..
நீங்கள்.

இளங்கலைப் பயணம்
இதோ முடிந்தது ;
முதுகலைப் பயணம்
முன் நிற்கிறது;

கல்வியின் காதலோடு
அடுத்தடுத்துப் பயணிக்கும்
பாதைகளில்,
பழைய சுவடுகளின்
புதிய தோற்றமாய்
பொங்கட்டும் இன்பம்.
நீங்காத நட்பும்
கலங்காத காதலும்
வாழ்வே வெற்றியுமாய் அமைய,
வாழ்த்த விரும்புகிறேன் .

படைத்தவன்
நம்மைப் பிரிப்பது
பிரிவின் சுகத்தை சுவைக்க.

நிதமும் இனி ..
சந்தித்துக் கொண்டே இல்லாமல் ,
சிந்தித்திருப்போமா , சிலகாலங்கள் ?!

Wednesday, September 2, 2009

மனிதம்

உன் பிறப்பின் பொருளைக் கூட
முழுமையாக அறியாத நீ ,
ஏன் சிந்திக்க வேண்டும் ,
சிதைந்து போகும் சாதியைப் பற்றி !?
உன் சாதிதான் சிறந்தது என்றால் ,
அதுவே மக்களைக் காக்கும் என்றால்,
நீ குண்டுகளைப் பாய்த்துக் குருதி
வெள்ளத்தைப் பெருக்குவதேன் ?
மனித நேயம் ஒன்றே மகத்தானது
என்பதை மட்டும் , ஏனோ மனிதா
நீ இன்னும் நினையவே இல்லை ?

தேடல்

இளைஞனே ,
பருவமிது உனைத்தேடி
பாதிப்பை உண்டாக்க,
பாவை இவளது
பார்வை தேடி,
பேதை உன்
வாழ்வு ,பாழாவதா ?
சிகரத்தை அடையக்கூடியவனே
சீற்றம் எதற்கடா
இச்சிறு வயதில் ?
சிந்தித்து செயல்பட்டு ,
சிறப்பை நீ தேடிக்கொள்ள
பெற்றோருக்குப் பெருமை சேர்த்து ,
பெருந்தன்மை நீ தேடிக்கொள்ள ,
பாவை அவள்...
நீ தேடியவள்....
உனது பாசத்தைத் தேடி ...
இதோ ....வருகிறாள். !

கனா ...

குன்றாத இளமை
குளிர்ந்து ,
கனிவான கண்ணம்
சிவந்து,
மென்மையான உணர்வு
மெழுகாய் கரைகிறதே ...

விழித்த பின் தான்
அறிந்தாள் , நாளைய கல்யாணத்தின்
இன்றைய களிப்பான கனவு .