Sunday, March 6, 2016

கர்ப்பிணி


அர்த்தமற்றதாய் போன
அன்பும் கூட
இன்றியமையாததாய் போகிறது.
கருவில் வளரும்
நம் பிள்ளைக்கென ;
காதலித்தே தீருவேன் உனை
களிப்பில் உன்
கண்கள் கலங்கும் வரை.

நிலையில்லா நிரந்தரம்


நிரந்தரம்  இல்லா உலகில்
திருமணம் எனும் பந்தம்
நிரந்தரம் என நினைத்து
வாழும் முட்டாள்களாக  இல்லாமல்,
முதிர்ந்த மனைவிகளாய்
மாறிவருகிறோம் நாமும்.
இன்னல் என தெரிந்தும்
இடம் வலம் என இல்லாமல்
அனைத்தையும் கொடுத்தோம்.
நம் மூளைக்கு
இடம் வலம்
எல்லாம் ஒன்றே
என்றெண்ணி
முழுதும் கொடுத்தோம்..
இன்றோ,
இனியும் வாழ
இனிதே இருந்த
தருணங்களை மட்டும்
நினைவில் கொண்டோம்.

தருணங்கள்

தருணங்கள் 

எங்கிருந்து வந்தான்
இவன் ?
மற்றொருவன்
என் தந்தையைப் போலவே.
தந்தைக்கு உறவோ ?எனில், எனக்கும் உறவே.
மாமன் நீ ; வரும்நாட்களில்
நான் வளர்ந்த பின்
என்னை ஏந்தப்போவதில்லை
புன்னகைத்துப் பறிமார
புகைப்படங்கள் இதுபோல்
இன்னும் வேண்டும்.
நினைந்து பார்க்க
நிஜமான பொக்கிஷம் தான்.




                                                                                                               

அப்பாவின் நினைவுகளில்...

அப்பாவின் நினைவுகளில்...

சில காட்சிகள்
பல நினைவுகள்..
மறப்பதும் இல்லை
இறப்பதும் இல்லை..
காட்சிகளிலும்
நினைவுகளிலும்
மறைந்திருப்பதும் 
நிறைந்திருப்பதும்
உணர்வுகள் மட்டுமே.



Sunday, February 28, 2016

பார்த்தலும் புரிதலும் பழங்கதை


புரிதல் எங்கு இருக்கவேண்டுமோ
அங்கு எப்போதுமே இருந்ததில்லை..
புரிதல் இருக்குமிடமோ
தொலைதொடர்பு  அற்ற நிலையில்
புதிர் தான் !!
புரிந்துகொள்ளுதல் கடினமெனினும்
புரிதல் போல பாவித்தல்..
புரிவதே இல்லை.

Saturday, February 27, 2016

ப்ளாஸ்டிக் மெல்லும் பசுமாடுகள்



பிறவா குழந்தையும் பசிக்கு
அழுகிறது.தாயின் கர்பத்திலேயே
பார்வை இழக்கிறது.
காணும் இடமெல்லாம் கணிப்பொறி.
கூப்பிடு தூரத்திலிருப்பினும் கைப்பேசி.
குறுந்தட்டில் குறள் பயிலும் சிறுவர்.
காலம் மாறித்தான் போனது
குழந்தைகள் கிறுக்கிப் பார்க்க
காகிதம் தீர்ந்தது.
சிறுதானியம் தின்று
செழித்திருந்தது போய்
உண்ணும் உணவில்
உடலும் மனமும் பலவீனப்பட
பல மருந்துகள்.
வேண்டுமென்று எடுக்கவும் முடியாமல்
வேண்டாமென்று ஒதுக்கவும் முடியாமல்
வாழ வழியின்றி தவிப்போரும்
வாழ விருப்பின்றி திரிவோரும்
வாழ்ந்தும் வாழாமலுமாக திசைமாறினோரும்
வாழ்ந்தே ஆகவேண்டுமென துடிப்போரும்
அப்பப்பா
வாழ்க்கையெனும் இப்பாடம்
பயில பயில
இருப்பதைக்கொண்டு
இருப்பு நிலையடைந்து
இறப்பு நிலை மறந்து
என்னென்னவொ எண்ணங்களை
நினைத்துக்கொண்டிருக்கயிலே..
என்ன தான் சிந்திக்கின்றன
இங்கு நான் பார்க்கும் இந்த
மக்காத குப்பையைத் தின்னும்
இந்த மாடுகள்
பஞ்சகவ்யம் பாழாய்ப்போனது
ப்ளாஸ்டிக் உரமானது.அதுவே
இதன் உணவும் ஆனது..
வாழ்வெனும் பாடம்
அறுஞ்சுவைதான் - நினைவில் மெல்ல
மென்று அசைபோட.
கறவை தீர்ந்த பசுக்கள் அல்ல...
ப்ளாஸ்டிக் தின்றேனும்
பால் புகட்டும்
கோ மாதாக்கள்.

Saturday, February 13, 2016

காதலர் தினம்

Happy Valentine's Day .

என்னை இழந்த பின்னும்,
அளிக்கிறேன் உன்னிடம்
என்னை அழிக்காமல்
அளிப்பதற்க்காகவே
நிறைந்த கனிவோடு
மறந்த காதலை
நினைவுபடுத்த,
நித்தமும்
உன் சித்தம் என்றிருக்க
இரு பிள்ளைகள்,
இரு பக்கம். நான்
இழந்த மதிப்பை
ஈட்டித் தர ,
வளர்ந்து நிற்ப்பர்.
நாளை காதலொடு
அவர்கள் பக்கம்
இரு மகள்களும் !
பெருமிதம் பொங்கி
வியந்தும் உரைக்க
"வாழ்ந்தால்" நம்மைப்போல்
வாழவேண்டும் என்று.
அன்று காண்பேன்
காதலோடு உன் கண்ணை ;
நன்றியும் உரைத்து, அதுவே
நம் "காதல் தினம்" என !