
எதிலும் பற்று அற்றதாய்
நான்,
எல்லாம் பற்றி பழகவேண்டும் என
அவர்.
அறிவைக்கூட அளவோடு பயன்படுத்தும்
நான்,
ஆண்டவனோடும் அறிவு செலுத்தவேண்டும் என,
அவர்.
மிகவும் அழகாய் இருத்தல் ஆபத்தென்பேன்,
நான்,
மிக்க அழகு மனிதனின் ஆயுதமன்றோ என்பார்
அவர்.
மன உளைச்சலானால் , நேரம் முக்கியம் அல்ல என
நான்,
மண்டை உடைந்தாலும் நேரம் தவறக்கூடாதென
அவர்.
பிடித்தவை யாவும் ரசித்து ருசிக்கும்
நான்,
பிடித்ததே ஆயினும் ருசிக்கு மயங்கக்கூடாது என
அவர்.
அழுகையும் காதலும் அடைக்க முடியாது என
நான்,
காதலால் கூட கண்ணீர்வடிக்க கூடாதென
அவர்.
இப்படிப் பல வேறுபற்ற எண்ணங்களோடு
நானும் அவரும்,
இல்லறம் இனிமை எனவும் முடியாமல்,
இன்னல் என்றுரைக்கவும் மனமில்லாமல்,
அவ்வப்போது ஓர் நெருடலும் அதன் ஓடே
என்றும் பிரியவேண்டாத நெருக்கமும்,
திருமணத்திற்கு பிறகுதான் யோசிக்கிறேன்
நிதமும் உன்னைப்பற்றி.
அம்மா, உன் பொறுமை,
எனக்கும் கொஞ்சம் கொடுக்கச் சொல்லி ,
எனக்காக,
உன் இஷ்ட தெய்வத்திடம் கேட்பாயா ப்ளீஸ் ... ?!